இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.
இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 இலட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில் துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021, தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021. தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022, தமிழ்நாடு விண்வெளி & பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022. தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023,
மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புதிட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள். 23.5.2023 அன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஈஸ்வரன் அவர்களையும், மாண்புமிகு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்கள்.
அன்று மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு-SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்கள்.