சிங்கப்பூர் எல்லை கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகும் சிங்கப்பூர் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் தமிழக ஊழியர்கள்.

சிங்கப்பூர் நோய் பரவல் காரணமாக எல்லை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது ஆனால் சிங்கப்பூர் அரசு இந்த மாதம் பத்தாம் தேதி முதல் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் அதை சார்ந்து இருக்கக்கூடியவர்கள் சிங்கப்பூர் வரலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக அதுவும் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல விரும்பும் வேலை அனுமதி கடிதம் வைத்திருப்பவர்கள் மற்றும் புதிய வேலை அனுமதி விண்ணப்பம் செய்து இருந்தவர்கள் சிலர் சிங்கப்பூர் செல்வதற்கான முன் ஏற்பாடுகளில்  சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 

பல்வேறு ஊழியர்கள் கோவாக்சின் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். சிங்கப்பூரை பொறுத்தவரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள அவசர பயன்பாட்டு பட்டியலில் இருக்கும் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

கோவாக்சின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் அவசர பயன்பாட்டு பட்டியலில் இன்னும் இடம் பெறவில்லை விரைவில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில்  30 நாட்களுக்குள் வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஆவணங்கள் என்னென்ன சமர்ப்பிக்க வேண்டும் என்ற தெளிவான விபரங்கள் இதுவரை சொல்லப்படவில்லை.

சிங்கப்பூர் செல்வதற்கான வேலை அனுமதி கடிதத்தை சமர்பித்தால் தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் 30 நாட்களுக்குள் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது சிலர் அடையாள ஆவணமாக பாஸ்போர்ட் அல்லாமல் ஆதார் அட்டைகளை வழங்கி உள்ளனர். எனவே அவர்களது தடுப்பூசி சான்றிதழ்களில் எப்படி பாஸ்போர்ட் எண்ணை இணைப்பது என்பது தெரியாமல் பல்வேறு ஊழியர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் .