வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சிங்கப்பூருக்கு ஈர்க்க உதவுகிறது புதிய அனுமதி அட்டை -பிரதமர் லீ

வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களைச் ஈர்க்க சிங்கப்பூருக்கு Tech.Pass எனும் புதிய அனுமதி அட்டை உதவிவருகிறது என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கருத்தரங்கு 2020-இல் சிறப்புரை ஆற்றிய திரு. லீ, கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அனுமதி அட்டை குறித்து பேசினார்.

அப்போது சிங்கப்பூர் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட சமூகத்தையும் மின்னிலக்கத் துறையையும் மேம்படுத்தும் வேளையில், அரசாங்கம் அதன் தகவல் தொழில்நுட்பப் பொறியியல் ஆற்றலையும் வலுப்படுத்திவருகிறது என கூறினார்.

இருப்பினும் துறையை வளர்ப்பதற்கும் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், சிங்கப்பூருக்கு மேலும் தொழில்நுட்பத் திறனாளர்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய அனுமதி அட்டை வழியாக, அத்துறையில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்களையும் சிங்கப்பூரின் தொழில்நுட்பச் சமூகத்திற்குப் பங்களிக்கக்கூடியவர்களையும் ஈர்க்கமுடியும் என்று நம்பப்படுகின்றது.

இருப்பினும், ஒரே துறையில் வெளிநாட்டுத் திறனாளர்கள் அதிகளவு எண்ணிக்கையில் இருக்கும்போது, சமூக ரீதியான பிரச்சினைகள் எழும் சாத்தியத்தைத் திரு. லீ அவர்கள் சுட்டினார்.