மலேசியா : வெளிநாட்டிற்குச் செல்லும் மாணவர்கள் இனி குடிநுழைவு துறையின் அனுமதி பெற தேவையில்லை …!

மலேசியா புத்ரா ஜெயா செப்டம்பர் 15ஆம் தேதி இன்று வெளிநாட்டிற்கு கல்வியை தொடர செல்லும் மாணவர்கள் அல்லது மாணவர் பதிவுக்கு செல்ல உள்ள மாணவர்கள் குடிநுழைவுத் துறையின் அனுமதி பெற வேண்டியதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அதற்கு மாறாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் கல்வி வாய்ப்பு கடிதம் அல்லது கல்லூரி அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்தால் போதுமானது என்று பாதுகாப்பு மூத்த அமைச்சர் டதோ ஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் மாணவருடன் உடன் செல்ல விரும்பும் குடும்ப உறுப்பினர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் .ஆனால் அதிகபட்சமாக மாணவருடன் இருவர் மட்டுமே செல்ல அனுமதி என்று யாக்கோப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ்வாண்டு ஜூலை 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மொத்தம் 29054 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களில் 10 ஆயிரத்து 414 பேர் தனிமைப்படுத்தபடும் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் 71 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் மீதமுள்ள 18 ஆயிரத்து 569 பேர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.