திருப்பூரில், 1,165 படுக்கைகளுடன் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில், வென்டிலேட்டர் உட்பட 1,165 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக, கொரோனா மருத்துவமனைகள் தயார்நிலையில் இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அளவில், கொரோனா பாதிப்பில், 27வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், தற்போது 3வது இடத்தில் உள்ளது.
டெல்லி சென்று வந்தவர், அவரது குடும்பத்தினர் உட்பட, 79 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; ஒருவர் குணமடைந்துள்ளார்; மற்றவர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்றைய நிலவரப்படி, 43 பேர், மருத்துவக்குழுவின் கண்காணிப்பிலும், 847 பேர் வீட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி, தாலுக்கா தோறும், தலா, 150 படுக்கை வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவ மனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் குடும்பத்துடன், நேரடி தொடர்பில் இருந்த நபர்கள், தேடி கண்டறியப்பட்டு வருகின்றனர்.திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், உரிய சிகிச்சை வசதி தேவை. அதற்காக, தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனைகள் தயாராகியுள்ளன.
ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறியது:திருப்பூரில் ஜெய்வாபாய் பள்ளி; அவிநாசியில், மகாராஜா கல்லுாரி; தாராபுரத்தில் அரசு ஐ.டி.ஐ., என, தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலமாக, கட்டிட பராமரிப்பு செய்து, மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் வசதிகளுடன், தயார்நிலையில் உள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும், ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்கு எடுக்கும்,வகையில் ‘கலெக் ஷன் பூத்’களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான அளவு, கட்டில், மெத்தை, பெட்ஷீட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது; ஓரிரு நாட்களில் திருப்பூர் வந்துவிடும்.கொரோனா தடுப்பு பணி ஒருபுறம் நடந்து வருவது போல், பேரிடரை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, அனைத்து தாலுகாவிலும் சேர்த்து, 1,165 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன. விரைவில், சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெறிவித்தார்.