ஐ.டி.நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயக்கலாம் !! மத்திய அரசு உத்தரவு

ஏப்ரல் 20 ம் தேதி முதல் ஐ.டி.நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. விவசாயம், எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம் என்றும் அறிவிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு மிக அவசியம் எனக் கூறிய பாரத பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் , வருகிற 20 ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஐ.டி.நிறுவனங்கள், ஐ.டி. தொடர்பான சேவைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம். மேலும் சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என மத்திய அரசு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.