தமிழகத்தில் எரியும் காடு (வனப்பகுதி)

திரு .ராமமூர்த்தி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.

எரியும் காடு…

எமது வீட்டிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்ருக்கும் அப்பால் உள்ளது கடம்பூர் மலை. இது சத்தியமங்கலத்திற்கு கிழக்கே, கிழக்குத் தொடர்ச்சி மலையின் துவக்கப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி…

சத்தியமங்கலம் மற்றும் கடம்பூரிற்கு மத்தியியில் உள்ளதுதான் உயர்ந்த மலைப்பகுதியான கம்பத்ராயன் கிரி என்கிற கம்பத்ராயன் மலை…

இந்தத் தகவல் எதற்கு என்கிறீர்களா ?
அங்குதான் இப்போது நாம் மிச்சமாக வைத்திருக்கும் எஞ்சிய காட்டின் நடுவே தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது…

இந்த பூமியில் குறைந்த பட்சமாக 33% காடுகளாவது இருக்க வேண்டும். அரசு ஆவணங்களில் இருக்கிற காடுகளின் பரப்பு எவ்வளவு எனத் தெரியாது. ஆனால் காடு இன்றைக்கு அந்த அளவினை விட மிக சுருங்கியதாகவேதான் இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை…

அப்படி எஞ்சியிருக்கிற காட்டில்தான் மிகப் பெரிய அளவில் இப்போது நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பம் மிகுவதில் காடு சுருங்குவது என்பது,
ஒரு மிகப்பெரும் காரணி. இதை எத்தனை பேர் உணர்ந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை…

இன்னும் நாம் உணராவிட்டால், நமது அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு நாம் செய்யக்கூடிய ஆகப்பெரும் துரோகம் இதுதான்…

மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நிலையில். இதுவெல்லாம் மிக முக்கியமா எனக் கேட்பவர்களுக்கு…

இதையெல்லாம் நின்று கவனிக்காமல் தான்தோன்றித்தனமாக ஒட்டுமொத்த மனித இனமும் பொருளாசையில் ஓடியதால்தான், இன்றைக்கு நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்…

எனது சிறிய வயதில் பல இரவுகள் இந்த கோடைகளில் சத்தியமங்கல வனப்பகுதி மலைகளில் எரியும் காட்டுத்தீயை பார்த்திருக்கிறேன். காட்டுத் தீயானது மூங்கில்கள் உரசுவுவதால் ஏற்படுகிறது என பெரியவர்கள் சொல்வார்கள், அதைக் கேட்கும்போது என்மனம் அப்போது மிக ஆச்சரியப்படும்…

ஆனால் உண்மையில் அப்படி நெருப்பு பிடிக்க வாய்ப்பு என்பது, மிக மிக குறைவு. ஆயிரம் நெருப்புகளில் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நெருப்பு சம்பவங்கள், மனிதர்களினால் மட்டுமே ஏற்படுகிறது என்பதே உண்மை…

சிகரெட்துண்டுகளை தூக்கி எரிவது, சில இடங்களில் நெருப்புமூட்டி சமைப்பது போன்ற செயல்கள் காடுகளுக்கு மிகுந்த ஆபத்தானவை. தீ சம்பவங்களில் கால்நடை மேய்ப்பவர்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது…

இடி, மின்னல், எரிமலை, மின்கம்பி உராய்வு, பாறை உருள்வதனால் கூட நெருப்பு ஏற்படும் ஆனால் நமது காடுகளில் அதற்கான வாய்ப்புகள் என்பது, மிக மிக குறைவு….

வனத்துறையினரும் தீத்தடுப்பிற்கான செயல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றுகிறார்கள் அதையும் தாண்டி பல இடங்களில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தீ எரிகிறது, இதற்கு பழைய தீத்தடுப்பு முறையை விடுத்து புதிய முறையை உருவாக்க வேண்டும்…

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆகும் செலவினை குறைத்து, மனிதர்களின் பாதுகாப்பையும், காடுகளின் பாதுபாப்பையும் ஆள்பவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது பேரன் பேத்திகள் பயமின்றி நிம்மதியாக தூங்குவார்கள்…

பேரன்போடு,
Ramamurthi Ram

Photos Ramamurthi Ram Fb